Posted by :
Unknown
Monday, May 27, 2013
பெர்சனல் கம்ப்யூட்டருடன் ஒப்பிடுகையில், மொபைல் போன்கள் தான் அவற்றில் குறிப்பிட்ட வகை தடை அமைக்கும் பூட்டுக்களோடு வருகின்றன. இவற்றை தயாரிப்பாளரின் அனுமதி இன்றி மாற்றி அமைப்பதனையே மேற்கண்ட மூன்று சொற்களும் குறிக்கின்றன. ஆண்ட்ராய்ட் மற்றும் ஐபோன்களின் பரவலுக்குப் பின்னர் பயானளர்களிடையே ஜெயில்பிரேக்கிங், அன்லாக்கிங் மற்றும் ரூட்டிங் போன்ற சொற்கள் அதிகமாகப் புழக்கத்தில் உள்ளன.
மொபைல் போன் ஒன்றில், அதன் வடிவமைப்பினை மாற்றினால் கூட, சிலர் இந்த சொற்களால் அந்த செயலைக் குறிக் கின்றனர். ஒரு சிலர், இந்த சொற்கள் சுட்டிக் காட்டும் எந்த செயலை மேற்கொண்டாலும், போன் வழக்கம் போல வேலை செய்யாது என்று பயம் கொள்கின்றனர். சிலரோ, இது போல செயல்களை மேற்கொண்டால், போன் நிறுவனம் நம் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து, அந்த போனைப் பயன்படுத்து வதனையே முடக்கிவிடலாம் என்றும் எண்ணுகின்றனர். ஆனால், நடைமுறையில் அப்படி எதுவும் இல்லை. மேலும் இந்த சொற்கள் ஒவ்வொன்றும் ஒரு நடை முறையைக் குறிக்கின்றன. அவை என்ன வென்று பார்ப்போம்.
ஜெயில் பிரேக்கிங் (Jailbreaking): டிஜிட்டல் சாதனம் ஒன்றில், அதனைத் தயாரித்தவர் அமைத்துள்ள சில வரைமுறை எல்லைகளை நீக்குவதுதான் ஜெயில் பிரேக்கிங். பொதுவாக இந்த செயல்பாட்டினை, ஆப்பிள் நிறுவனத் தின் ஐ.ஓ.எஸ். ஆப்பரேட்டிங் சிஸ்டம் இயக்கம் கொண்டுள்ள ஐபோன் மற்றும் ஐபேட் சாதனங்களில்தான் மேற்கொள் கின்றனர். பொதுவாக ஆப்பிள் நிறுவனம் இந்த சாதனங்களில் தன் ஆப்பிள் ஸ்டோர்களில் இல்லாத சாப்ட்வேர் அப்ளிகேஷன்களைத் தன் போனில் நிறுவத் தடை அமைத்துள்ளது. ஜெயில் பிரேக்கிங் புரோகிராம் மூலம், இந்த தடைகளை நீக்கிவிட்டால், மற்ற தர்ட் பார்ட்டி சாப்ட்வேர் தொகுப்புகளை, இந்த போனில் அமைத்து இயக்கலாம்.
எடுத்துக்காட்டாக, ஆப்பிள் நிறுவனம் அனுமதி தராத பிரவுசர்கள், மாறா நிலையில் அதில் தரப்பட்டுள்ள மெயில் கிளையண்ட் புரோகிராம்களுக்குப் பதிலாக வேறு புரோகிராம்களைப் பயன்படுத்தலாம். பொதுவாக, ஜெயில் பிரேக்கிங் என்பதனை, சாப்ட்வேர் பைரசி எனப்படும் திருட்டுத் தனமாக நகல் எடுத்து இயக்குவது என அனைவரும் எண்ணிக் கொண்டிருக்கிறோம். அது தவறான எண்ணம் ஆகும். அடிப்படையில், ஆப்பிள் நிறுவனம் தன் சாதனங்களில் அனுமதிக்காத புரோகிராம்களைப் பதிந்து இயக்க மேற்கொள்ளப்படும் வழிகளே ஜெயில் பிரேக்கிங் ஆகும்.
அப்படியானால், மற்ற சாதனங்களில் ஜெயில் பிரேக்கிங் வழிகளை மேற்கொள்ள முடியாதா என நீங்கள் கேட்கலாம்.
ஆப்பிள் நிறுவனம் அமைத்துள்ளது போன்ற தடைகள் உள்ள எந்த சாதனத்திலும் இதனை மேற்கொள்ளலாம். எடுத்துக்காட்டாக, மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள சர்பேஸ் ஆர்.டி. சாதனத்தில் தற்போது ஜெயில் பிரேக்கிங் மேற்கொள்ளப்படுகிறது. இதன் மூலம் மைக்ரோசாப்ட் அங்கீகரிக்காத டெஸ்க்டாப் புரோகிராம்களை இதில் ஜெயில் பிரேக்கிங் மூலம் இயக்கலாம். மாறா நிலையில், விண்டோஸ் ஆர்.டி. சாதனங்களில், மைக்ரோசாப்ட் தயாரித்த டெஸ்க்டாப் அப்ளிகேஷன் புரோகிராம்களை மட்டுமே இயக்க முடியும். ஆனால், ஜெயில்பிரேக்கிங் மேற்கொண்ட பின்னர், பதிந்து இயக்கக் கூடிய புரோகிராம்கள், ஏ.ஆர்.எம். ப்ராசசர்களில் இயங்கும் வண்ணம் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். எனவே, ஏற்கனவே விண்டோஸ் இயக்கத்தில் இயங்கும் அனைத்து புரோகிராம் களையும் இதில் இயக்க முடியாது. ஓப்பன் சோர்ஸ் இயக்கத்தில் எழுதப்பட்டுள்ள புரோகிராம்களைச் சற்று மாற்றி, ஏ.ஆர்.எம். ப்ராசசரில் இயங்கும் வண்ணம் அமைக்கலாம்.
ஜெயில் பிரேக்கிங் செயல்முறையை எப்படி மேற்கொள்கிறார்கள்?
ஒரு தடையைத் தரும் வகையில் பாதுகாப்பாக அமைக்கப்பட்ட குறியீடு வேலிகளை எப்படி மீற முடியும்? இங்கு தான், மைக்ரோசாப்ட் மற்றும் ஆப்பிள் நிறுவனங்கள் இந்த சாதனங்களில் அமைத்துள்ள கட்டமைப்புகளின் பலவீனங்கள் தெரிய வருகின்றன. இந்த கட்டமைப்பில் சரியாக அமைக்கப்படாத குறியீடுகளைக் கண்டறியப் பட்டு, ஜெயில் பிரேக்கிங் சாப்ட்வேர் புரோகிராம்கள் எழுதப்படுகின்றன.
ஆண்ட்ராய்ட் சாதனங்களில் இந்த பிரச்னையே இல்லை. ஆண்ட்ராய்ட் சாதனங்களுக்கான அங்கீகரிக்கப்பட்ட புரோகிராம்கள் கூகுள் அப்ளிகேஷன் ஸ்டோரில் கிடைக் கின்றன. ஆனாலும், இதில் காணப்படாத, மற்ற தர்ட் பார்ட்டி அப்ளிகேஷன் புரோகிராம்களையும் இன்ஸ்டால் செய்து இயக்க, ஆண்ட்ராய்ட் சாதனங்கள் வழி தருகின்றன. ஆண்ட்ராய்ட் சிஸ்டம் ஓப்பன் சோர்ஸ் புரோகிராம் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. யார் வேண்டுமானாலும், அதன் அமைப்பின் புரோகிராம் தன்மையினைத் தெரிந்து கொள்ளலாம்.
ரூட்டிங் (Rooting): ஒரு சிஸ்டம் இயங்குவதற்கு அடிப்படையான வேர்கள் போல இயங்குகிற குறியீடுகளை மாற்றி அமைக்க வழி தரும் செயல்பாடுகளே ரூட்டிங் என அழைக்கப்படுகின்றன. பொதுவாக, ஆண்ட்ராய்ட் சாதனங்களில் மேற்கொள்ளப்படும் செயல் முறைகளை இது போல குறிக்கின்றனர். ஆனாலும் லினக்ஸ் அடிப்படையில் இயங்கும் சாதனங்களின் இயக்கத்தை மாற்றுவதனையும் இந்த சொல் கொண்டு குறிப்பிடுகின்றனர். எடுத்துக்காட்டாக, நோக்கியா வெகுகாலமாகப் பயன்படுத்தி, தற்போது ஓய்வு கொடுத்துக் கொண்டிருக்கும் சிம்பியன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் லினக்ஸ் அடிப்படையில் அமைந்ததாகும்.
பொதுவாக லினக்ஸ் மற்றும் யூனிக்ஸ் போன்ற ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில், ரூட் யூசர் எனப்படுபவர், விண்டோஸ் இயக்கங் களில் அட்மினிஸ்ட்ரேட்டர் என அழைக்கப் படுபவர் போன்ற உரிமை கொண்டவர் ஆவார். ரூட்டிங் மூலம் ஆப்பரேட்டிங் சிஸ்டம் இயக்க உரிமை கிடைத்துவிட்டால், நாம் அதனை எப்படி வேண்டுமானாலும் நம் விருப்பப்படி இயக்கலாம். அந்த சிஸ்டத்தையே எடுத்து விட்டு, புதிய சிஸ்டத்தை அமைக்கலாம். எந்த அப்ளிகேஷன் புரோகிராமையும் பதிந்து நம் விருப்பத்திற்கேற்ப இயக்கலாம்.
அன்லாக்கிங் பூட்லோடர் (Unlocking Bootloader): ஆண்ட்ராய்ட் ஆப்பரேட்டிங் சிஸ்டம் என்பது ‘திறவூற்று’ என அழைக்கப்படும் ஓப்பன் சோர்ஸ் கட்டமைப்பாகும். எனவே, யார் வேண்டுமானாலும் இதன் குறியீடு வரிகளைப் பெற்று, ஆண்ட்ராய்ட் இயக்கத்தினைப் போலவே மாற்று இயக்கம் ஒன்றை உருவாக்க முடியும். உருவாக்கி அதனை மாற்ற முடியாத படி பதித்து வழங்க முடியும். இதனால் தான், Cyanogenmod என்று அழைக்கப்படுகின்ற புரோகிராம்கள் கிடைக்கின்றன. ஆண்ட்ராட்ய் சிஸ்டத்தில் இயங்கும் வகையில் இது போன்ற மாற்று அப்ளிகேஷன் புரோகிராம்கள் நிறைய கிடைக்கின்றன. இது போலத் தயாரிக்கும் வழிமுறையையே ‘அன்லாக்கிங் பூட்லோடர்’ என அழைக்கின்றனர்.
ஓப்பன் சோர்ஸ் அடிப்படையில் அமைந்தாலும், ஆண்ட்ராய்ட் இயங்கும் சில சாதனங்கள் பாதுகாக்கப்பட்ட பூட் லோடர் களுடனேயே (Locked bootloaders) வருகின்றன. இத்தகைய பூட் லோடர்கள் இயங்கும் சாதனங்கள், அவற்றைத் தயாரித்தவர்கள் அங்கீகரித்த ஆண்ட்ராய்ட் மற்றும் ஆண்ட் ராய்ட் சார்ந்த புரோகிராம்களை மட்டுமே இயக்கும். இதனை மாற்றி அமைக்கும் (Unlocking Bootloader) வழி மேற்கொண்டால் மட்டுமே, இந்த சாதனங்களில் மற்ற சிஸ்டம் புரோகிராம்களை இயக்க முடியும்.
போன் அன்லாக்கிங் (Unlocking a phone): மொபைல் இணைப்பு சேவையினை வழங்கும் நிறுவனங்களுடன், மொபைல் போன் தயாரிப்பாளர்கள் ஒப்பந்தம் மேற்கொண்டு, அந்த சேவை நிறுவனங்களின் சிம் கார்டுகள் மட்டுமே இயங்கும் வகையில், போன்களைத் தயாரித்து விற்பனை செய்திடும் பழக்கம் இந்தியாவில் அவ்வளவாக இல்லை என்றாலும், மற்ற நாடுகளில், குறிப்பாக அமெரிக்காவில், உள்ளது. இது போன்ற போன்களை “லாக்டு போன்” (‘locked phone’) என அழைப்பார்கள். இவற்றின் விலை மிகக் குறைவாக இருக்கும். இதனை விற்பனை செய்திடும் மொபைல் சேவை நிறுவனத்தின் சிம்களை மட்டுமே இதில் பயன்படுத்த முடியும்.
எனவே, மற்ற நிறுவனங்களின் சிம் கார்டினைப் பயன்படுத்த, இந்த போனில் உள்ள தடையை நீக்க வேண்டும். இதனையே Unlocking a phone என அழைக்கிறோம். பொதுவாக, இத்தகைய போன்களை விற்பனை செய்த நிறுவனங்கள், சேவை ஒப்பந்த காலம் முடிந்தவுடன், இந்த தடையை நீக்கும் புரோகிராம்களை அவர்களே அளிப்பார்கள். அதனைப் பயன்படுத்தித் தடையை நீக்கி, நாம் எந்த நிறுவனம் சிம் கார்டையும் அந்த போனில் பயன்படுத்தலாம்.